சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்கியதா இன்றைய ‘பராசக்தி’: சினிமா விமர்சனம்

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் தேசியக்கவி பாரதி. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
மேலும் தமிழுக்காக உழைத்து, தமிழை உயர்த்தி தன்னுயிர் நீத்தவர்களும் உண்டு. தமிழை வைத்து பிழைத்துக் கொழுப்பவரும் உண்டு.
உலகில் மொழிவெறி என்பது அன்றும் இன்றும் தொடர்கிறது. தாய்மொழி முக்கியம். அதைத் தாண்டிய மொழி கற்பது தவறா சரியா என்பதும் எழுச்சிக் குரலாய் எழுவது தொடர்கிறது. இதில், அரசியல் கலப்பும் உள்ளது என்பதை மக்களும் அறிவர்.
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் தமிழ் தவிர பிற மொழி கற்றுக் கொடுக்கும் கல்லூரிகளும் ‘தமிழ் முழங்கும்’ அரசியல் வியாதிகளுக்கு உண்டு. இது நடைமுறை வாழ்வில் நீள்வது இயல்பாயிற்று.
சரி, இப்ப 1960-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தை மையமாகக் கொண்டு சினிமாவாக்கி ரிலீசான ‘பராசக்தி’ என்ற பட விஷயத்திற்கு வருவோமா..
1960 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு தான் கதைக்கரு. இந்தி திணிப்புக்கு எதிராக ‘அகநானூறு’ என்ற பெயரில் மாணவர் புரட்சிப்படை நடத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், ரயிலை வழிமறித்து எரிக்கிறார்கள். இதனால் ஏற்படும் சண்டையில் போலீஸ் அதிகாரியான ரவிமோகன் தனது விரல்களை இழக்கிறார்.
இச்சூழலில், நண்பனை பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்றிலிருந்து போராட்டத்தை கைவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா முரளி போராட்டக் களத்தில் இறங்குகிறார். சிவகார்த்திகேயன் அதனை தடுக்கவும் முயற்சி செய்கிறார்.
இச்சூழலில், மதுரையில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் அதர்வா தலைமையிலான குழு கருப்புக் கொடி காட்ட திட்டமிடுகின்றனர். இந்நிலையில், இந்தி தெரியாத காரணத்தால், மத்திய அரசுப் பணி பறிபோக மதுரை வந்து சேர்கிறார் சிவகார்த்திகேயன். போராட்டத்தை தடுத்து நிறுத்த ரவி மோகன் விரைகிறார்.
இவ்வாறு தீப்பொறி பறக்கும் நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடந்ததா? சிவகார்த்திகனை ரவிமோகன் சந்தித்தாரா? என பரப்பரப்பாய் தெறிக்கிறது மீதிக்கதை.
படம் நெடுகிலும் புரட்சித்தீயுடன் கூடிய இயல்பான காட்சிகள் திரைக்கதையை சிறப்பித்திருக்கின்றன. சிவகார்த்திகேயனின் உடல்மொழி மற்றும் கனன்று முழங்கும் எரிதழல் வசனங்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு நிமிர்த்தியிருக்கிறது.
முதல் முறையாக வில்லனாக கர்ஜித்திருக்கும் ரவிமோகனின் நடிப்பு மெகா மிரட்டல். அதர்வாவும் புதிய பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார். ‘போயா போ’ என்ற கிளிமொழிப் பேச்சிலும், நடை உடை பாவனைகளிலும் வசீகரித்திருக்கிறார் ஸ்ரீலீலா.
1960 காலக்கட்ட கலை இயக்கமும், அதனை தத்ரூபமாய் வார்த்துக் கொடுத்த ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ஜி.வி. பிரகாஷின் வரலாற்று இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.
முன்னதாக, மத்திய தணிக்கை குழு உத்தரவின் படி இப்படத்தில் ‘தீ பரவட்டும்’ என்ற காட்சி ‘நீதி பரவட்டும்’ எனவும் ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ எனவும் மாற்றப்பட்டுள்ளது மேலும் ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, அன்று தமிழகத்தில் யார் யாருடன் கூட்டணி ஆட்சி? இன்று 2026-ம் ஆண்டில் யார் யாருடன் கூட்டணி ஆட்சி? என்ற அரசியல் ஆய்வும் இணையவெளியில் தற்போது வைரலாகி வருகிறது.
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சினிமா சொல்லும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்பவர் யாரோ? உலகத்தரக் கல்வியை எதிர்நோக்குதலே முன்னேற்ற வாழ்வியல் என்பதை பிள்ளைகளின் பெற்றோர் உணர்வர்.
முன்னதாக, இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவிக்கையில், ‘1960-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவத்தை இன்று சினிமாவாக்க முயற்சித்தேன். பலர் எச்சரித்தனர். ‘சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்’ என்ற முனைப்பில் சவால்களைத் தாண்டி படமாக்கி இருக்கிறேன்’ என்றார். அதனை மிக நுட்பமாய் சாத்தியம் ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் இன்பன் உதயநிதி வழங்கியுள்ள இந்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் உருவாக்கம் மற்றும் அவரவர் ஏற்ற கதாபாத்திரங்கள் யாவும் சிறந்த அர்ப்பணிப்பு.
பக்திப் பரவசமூட்டும் டைட்டில் போல இருந்தாலும், தாய்மொழிக்கு மட்டுமே முட்டுக் கொடுக்கும் சினிமாவாக குமுறியிருக்கிறது. இதுபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில திரைத்துறையும் முட்டுக்கொடுக்கும் நிலை வருமோ? அவரவர் வரலாற்றுக் குறிப்புகளுடன் எகிறிப் பாய்ந்தால் பாரதம் என்னாகுமோ? என்பதும் சிந்தனைக்கு உரியது.
‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்பதே மனிதகுல நீதி.
அவ்வகையில், இப்படம் நவீன சூட்சும வித்தை. ஆயினும், தமிழுலகு பார்க்க வேண்டும்; அரசியல் விளையாடிய விதத்தை, ஆக்கப்பூர்வ மொழியுணர்வு வீரியத்தை.!

பராசக்தி சினிமா விமர்சனம்
- Rating
