‘இருவருக்குமே ஆழமான புரிதல் இல்லை’ என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பவன் கல்யாண் மற்றும் விஜய்யுடன் தனது நீண்டகால நட்பையும், அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்தும் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில்,
பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ஆரம்பத்தில் திரையுலகில் கவனம் பெற்றார். இருந்தும், இருவருக்கும் தெளிவான அரசியல் பார்வையோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதலோ இல்லை.
பவன் கல்யாண் 10 வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்தார். விஜய் இப்போதுதான் வருகிறார். நான் இவர்களை அறிந்தவரை, நாங்கள் அரசியலைப் பற்றி தீவிரமாக பேசியதில்லை. அவர்கள் நடிகர்கள், அவர்களின் பிரபலத்தால் அரசியலுக்கு வந்துள்ளனர். பவன், கட்சி ஆரம்பித்த 10 வருடங்களில், மக்கள் பிரச்சினைகள் குறித்த தெளிவான பார்வையோ புரிதலோ அவரிடம் வெளிப்படவில்லை. அதே நிலைதான் விஜய்யிடமும் உள்ளது.
தற்போதைய அரசியல் சூழலுக்கு மாற்றாக மக்கள் அவர்களை ஆதரித்தாலும், அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். பவனுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை. வேறு வேலையில்லாமல் இருந்தார். ஆட்சிக்கு வந்தபின், அனைத்தையும் மறந்து, மேக்கப் போட்டு சனாதன தர்மம் பற்றிப் பேசுகிறார். விஜய் வசனங்கள் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அரசியலில் போராடுவதற்கு ஆழமான புரிதல் அவரிடம் இருக்கிறதா?’ என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்திலும் பிரகாஷ்ராஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.