இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் என்பதால், அறிவிப்பு வெளியான முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தனது படைப்புகளில் மண் சார்ந்த வாழ்வியலையும், உணர்வுப்பூர்வமான கதைகளையும் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ படத்திலும் தனது தனித்துவமான கதை சொல்லலை தொடர்கிறார்.

இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ‘வாழை’ படப்புகழ் ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ராகவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

“இளையராஜா சார் என் படத்தில் இருப்பது வாழ்நாள் சாதனை” – மாரி செல்வராஜ்

படப்பிடிப்பு தொடக்க விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால் இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பது என்னுடைய வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது என் வாழ்நாளில் நான் சாதித்த மிகப்பெரிய சாதனை.

எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் அழைத்த அந்த நிமிடத்தில், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.

இந்தப் படத்தின் திரைக்கதை எழுதும்போது, ‘இந்த இடத்தில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்றுதான் அதிகம் யோசித்தேன். இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்நாளின் முக்கியமான நாளாக இருக்கும்.

கதிர் இந்தப் படத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. நான் திரைப்பட இயக்குநராக இருப்பதற்கும் அவரும் ஒரு முக்கிய காரணம். கதையை கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட அனைவருக்கும் படத்தில் சிறப்பான கதாபாத்திரங்கள் உள்ளன.

இந்தத் திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும். அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்றார்.

“நானும் காடுமேடுகளில் வளர்ந்தவன்தான்” – இளையராஜா

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான்.

அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித் தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.

உலகின் மிகப்பெரிய மேதைகள் பலரும் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. இசை எனக்குள் அதுவாகவே வந்தது.

எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.

கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர்.

இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

தொழில்நுட்பக் குழு

‘மஞ்சணத்தி’ படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், சாண்டி நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பையும், சுரேன்.G மற்றும் அழகியகூத்தன்.S ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளையும், ஹரிஹரசுதன் R VFX பணிகளையும் மேற்கொள்கிறார். கபிலன் பப்ளிசிட்டி டிசைனையும், வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளையும் கவனிக்கின்றனர்.

திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IlaiyaraajaManjanathiManjanathi Shooting Begins - Mari Selvaraj & Ilaiyaraaja Join HandsMari Selvaraj