தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘பிளாஸ்ட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இயக்கியுள்ளார்.
‘ஏஜிஎஸ் 29’ என அழைக்கப்படும் இப்படத்தில் ஜெய், பிரியா மோகன், யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் படமாக இது இருக்கும். அதேநேரத்தில், நகைச்சுவை உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
- Advertisement -
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தியும், அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.
‘கேஜிஎஃப்’ மற்றும் சமீபத்திய ‘பிளாஸ்ட்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தையும், ஃபீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர்.
தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாகவும், டூனி ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.