வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த இன்வஸ்டிகேட்டிவ் கிரைம் த்ரில்லர் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தத் தொடரில் சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி, தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். தொடர் வெளியானதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள அவர், ரசிகர்களின் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்.
கலைத்துறைக்குள் வந்தது எப்படி?
சிறு வயது முதலே சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பா திரைப்படங்களில் பணியாற்றியதால், விடுமுறை நாட்களில் அவருடன் படப்பிடிப்பு தளங்களுக்குச் செல்வேன். அங்கு கேமராமேன், லைட்மேன், புரொடக்ஷன் என ஒவ்வொருவரும் கடுமையாக உழைப்பதை நேரில் பார்த்தேன். அதனால் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்னும் அதிகமானது.
12ஆம் வகுப்பு முடித்த பிறகு விஸ்காம் படிக்கலாம் என நினைத்தேன். ஆனால் அப்பா சட்டம் படிக்கச் சொன்னதால் தற்போது சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன்.
நடிப்பின் மீதான ஆர்வத்தால் பல நிறுவனங்களில் ஆடிஷனில் கலந்துகொண்டேன். பின்னர் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். சண்டைக் காட்சிகளுக்காக டேஞ்சர் மணியிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். மேடை நாடகங்கள், மைம், நடனம், சினிமா ஒர்க்ஷாப்கள் என தொடர்ந்து என்னைத் தயார்படுத்தி வருகிறேன்.
“கருப்பாக இருக்கிறாய்… கேமராவில் தெரியுமா?”
என்னுடைய உருவத்தையும் நிறத்தையும் வைத்து சிலர் கேலி செய்திருக்கிறார்கள். “கருப்பாக இருக்கிறாயே… உன் முகமெல்லாம் கேமராவில் தெரியுமா?” என்று கூட கேட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைகள் என்னை உடைக்கவில்லை. மாறாக, ஏன் நம்மால் நடிகனாக முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கியது.
ஒரு நடிகனுக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். உடற்பயிற்சி, சத்தான உணவு, நடிப்பு, சண்டை, நடனம் என தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?
ஆக்ஷன் ஹீரோ என்ற அடையாளத்தைவிட, நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை. பசுபதி சார் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாகப் பொருந்தி நடிப்பார். அதுபோன்ற நடிகராக வேண்டும். எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் என்னுடைய சிறந்த நடிப்பை வழங்குவேன்.
‘வதந்தி சீசன் 2’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?
என் அப்பா வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதால், கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நிறுவனத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் – காயத்ரி என்னைப் பார்த்து ஆடிஷனுக்கு வருகிறாயா என்று கேட்டார்கள்.
அவர்களிடம் ஆடிஷன் கொடுத்து தேர்வானேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். “எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பாயா?” என்று கேட்டார். ‘வதந்தி’ முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதன் இரண்டாவது சீசனில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பை விட விரும்பவில்லை என்று கூறினேன். அதன் பிறகு சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வானேன்.
‘வதந்தி சீசன் 2’ பற்றி?
‘வதந்தி’ முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனும் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தற்போது தொடரைப் பார்த்த அனைவரும் என்னுடைய நடிப்பையும் கதாபாத்திரத்தையும் பாராட்டி வருகிறார்கள்.
சினிமாதான் வாழ்க்கையா?
இந்த வெப் சீரிஸுக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நூறு சதவீத உழைப்பைக் கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரைக் காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.
திரைத்துறையிலும் மக்கள் மனதிலும் எனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்க வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். சினிமாவில் நடிகராக இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு துறையில் பணியாற்றிக் கொண்டே இருப்பேன்.
- Advertisement -
விஜய் vs ‘வதந்தி சீசன் 2’
நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ‘வதந்தி சீசன் 2’வை விஜய் சார் பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பும், பதற்றமும் எனக்கு இருக்கிறது.
மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவம்?
சுந்தரேசன் கதாபாத்திரம் ஒரு காட்சியில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்படுவான். அந்தக் காட்சிக்காக காலையில் எதுவும் சாப்பிடாமல் காத்திருந்தேன். காலை 8 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்த என்னை இரவு 8 மணிக்குத்தான் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். படப்பிடிப்பு அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது.
அனைவரும் சென்ற பிறகு என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. வலி தாங்க முடியாமல் அழத் தொடங்கிவிட்டேன். அங்கு பணியாற்றிய ஊழியர்கள் என்னைத் தூக்கி காரில் உட்கார வைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஒரு வாரம் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அந்த அனுபவத்தை சினிமாவுக்காக கிடைத்த நல்ல அனுபவமாகவே பார்க்கிறேன்.
அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தபோது படக்குழுவினர் அனைவரும் கைத்தட்டி பாராட்டியது மறக்க முடியாத தருணம்.
சுந்தரேசனாக பள்ளி சீருடையில் நடித்தபோது?
பள்ளியில் படித்தபோது நண்பர்களுடன் நிறைய அரட்டை அடிப்பேன். ஆனால் சுந்தரேசனைப் போல எந்தப் பெண்ணையும் பின்தொடர்ந்ததில்லை. பள்ளியில் இருந்தபோது நான் சுந்தரேசனுக்கு நேர்மாறான கேரக்டர். எப்போதும் நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பேன். அதனால் சுந்தரேசனாக பள்ளி சீருடை அணிந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
முதல் ரசிகர் குறித்து…
‘வதந்தி சீசன் 2’வைப் பார்த்துவிட்டு சுந்தரேசன் கதாபாத்திரத்தை ரசித்து என்னுடைய ரசிகராக யார் மாறினாலும் அது எனக்கு மகிழ்ச்சிதான். அதிலும் என்னுடைய முதல் ரசிகர் யாராக இருந்தாலும், அவரை நான் மறக்க முடியாதவராக நினைப்பேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் கடினமாக உழைக்கிறோம். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை.
வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானது குறித்து வருத்தமா?
இந்த வாய்ப்புகூட கிடைக்காமல் எத்தனையோ திறமையானவர்கள் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதே நேரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நூறு சதவீத உழைப்பைக் கொடுத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
அர்ஜுன் சக்கரவர்த்தியின் ரேபிட் ஃபயர்
பெற்றோர்: அவர்கள்தான் என்னுடைய முதல் கடவுள்.
நம்பிக்கை: எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்மைக் கடைசி வரை காப்பாற்றுவது நம்பிக்கைதான். அதை யாரும் கைவிடக் கூடாது.
ஆக்ஷன் ஹீரோ: ஆக்ஷன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்கவிடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதையே நானே செய்யும்போது இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஆசை.
பிடித்த நடிகர்: விஜய் சார். அதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
பிடித்த ஹீரோயின்: எல்லாரையும் பிடிக்கும்.
பிடித்த செலிபிரிட்டி: ‘வதந்தி சீசன் 2’வில் முடக்கத்தான் மணியாக நடித்துள்ள யஷ்வந்த். அவர் ஒரு சமூக வலைதள பிரபலம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சமூக வலைதளம்: தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டுமே ‘arjun_chakkaravarthy’ என்ற கணக்கு வைத்திருக்கிறேன். இதுவரை பிரைவேட்டாக இருந்த அந்தக் கணக்கை ‘வதந்தி சீசன் 2’ வெளியான பிறகு பொதுமக்கள் பார்வைக்கு மாற்றியுள்ளேன். இனிமேல் என்னுடைய சினிமா தொடர்பான விஷயங்களையும், என்னுடைய எண்ணங்களையும் அதில் பகிர்வேன்.