ரஜினிகாந்தை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது, இன்றைய சூழலில் கதை ஆசிரியர்களின் நிலை குறித்து ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எழுத்தாளர்களின் நலன் கருதி, அனைவருடனும் சுமூகமாக பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், ‘வள்ளி’, ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ள ரஜினிகாந்தை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

தங்களுக்கு நேரம் ஒதுக்கி உரையாடிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு சங்க நிர்வாகிகள் விடைபெற்றனர்.

RajinikanthRajinikanth Joins South Indian Film Writers Association as a Member