ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, ‘மொத ராத்திரி’ படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி என்றும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ராஜா கருப்பசாமி கதை கூறிய உடனேயே தனக்கு பிடித்துவிட்டதாகக் கூறிய அவர், தற்போது பல திரையரங்குகளில் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதாகவும், பிற மொழிகளிலும் படத்தை கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து தமிழில் தங்களுக்கு இது மூன்றாவது வெற்றிப்படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, நல்ல படத்தில் பணியாற்றிய திருப்தி இருப்பதாகவும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், முதல் படத்திலேயே பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, இயக்குநர் கதை சொன்ன தருணத்திலிருந்தே இந்தப் படம் அனைவருக்கும் சொந்தமானதாக மாறிவிட்டதாகவும், படக்குழுவினரின் நேர்மறையான அணுகுமுறையே பிரம்மாண்ட வெற்றியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகைகள் சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், இனியா ராம், தீபிகா உள்ளிட்டோரும் படத்தின் வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக, இயக்குநர் ராஜா அடுத்த சில ஆண்டுகளில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்றும், ரிஷிகாந்த் திறமையான நடிகர் என்றும் இனியா ராம் பாராட்டினார்.
நடிகர்கள் திலீப், கார்த்திகேயன் டிகே, அப்துல் லீ உள்ளிட்டோரும் தங்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநருக்கு நன்றி தெரிவித்தனர். ‘மொத ராத்திரி’ தங்களது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளதாகவும், பல ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தங்களுக்கு அடையாளம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -
இசையமைப்பாளர் பரத் சங்கர், தனது இசைப் பயணத்தில் ‘மொத ராத்திரி’ முக்கியமான மைல்கல் என குறிப்பிட்டார். நல்ல படம், சுமாரான படம் என்றுதான் திரைப்படங்களைப் பிரிக்க முடியும் என்றும், இப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சேத்தன் பேசும்போது, புதிய திறமையாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தில் இருந்து பல புதிய நட்சத்திரங்கள் உருவாக இருப்பதாகவும், ரிஷிகாந்தை திரையில் பார்க்கும்போது இளம் வயது அமிதாப் பச்சனை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், தனது கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். அனைத்து திரையரங்குகளிலும் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா இருவரும் சிறப்பாக நடித்துள்ளதாக பாராட்டினார்.
மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்புத் தேடியபோது, ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என பலரும் கூறியதாகவும், ஆனால் தற்போது தமிழ் சினிமாவிற்கு கொள்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் செயல்படும் ஒரு ஹீரோ கிடைத்துள்ளதாகவும் ராஜா கருப்பசாமி தெரிவித்தார். சிறிய படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தேவை என்றும், அந்த ஆதரவுதான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார்.
நடிகர் பகவதி பெருமாள், நல்ல படங்கள் வெற்றி பெற தயாரிப்பாளர்களின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டார். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும், அவற்றுக்கு ரசிகர்களின் ஆதரவு அவசியம் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக பேசிய நடிகர் ரிஷிகாந்த், தன்னை தங்களது வீட்டு பையனாக நினைத்து ஆதரவு அளித்த ஊடகத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆறு ஆண்டுகளாக தானும் இயக்குநர் ராஜா கருப்பசாமியும் இந்தப் படத்தை சுமந்து வந்ததாகக் கூறிய அவர், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து அனைவரும் சிரித்து மகிழும் வகையில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற தங்களது எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.