ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – நடிகர் மாதவன்

டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆர். மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அனைவரும் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் சென்று படத்தைப் பாருங்கள்” என்றார்.

ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஜி.டி. ராஜ்குமார், இந்த திரைப்படம் உருவாக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் மேற்கொண்ட ஆழமான ஆய்வுகளே முக்கிய காரணம் என்றும், படத்தில் சுமார் 70 சதவீதம் உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த தலைமுறையினருக்கு ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் சென்றடைய இந்த திரைப்படம் முக்கிய பங்காற்றும் என்றார்.

நடிகை அதிதி பாலன், “பத்மாவதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் வழியாகத்தான் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை பயணம் விரிகிறது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது” என்று கூறினார்.

நடிகை துஷாரா விஜயன், தனது திரைப்பயணத்தில் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் வித்தியாசமான வேடம் இதுவாகும் என்றும், அனைவரும் திரையரங்குகளில் படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் அரவிந்த், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்க்கை வரலாறு அல்ல, முழுமையான வணிக அம்சங்களும் கொண்ட சுவாரஸ்யமான கதை என்றும், அந்த கதாபாத்திரத்திற்கு மாதவனே பொருத்தமானவர் என ஆரம்பத்திலேயே முடிவு செய்ததாக தெரிவித்தார்.

நடிகர் சத்யராஜ், “கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான் கூட ஜி.டி. நாயுடுவின் அருங்காட்சியகத்தை இதுவரை பார்வையிடாதது வருத்தமாக இருந்தது. இந்த படத்தில் நடித்த பிறகுதான் அவரது மகத்துவம் முழுமையாக புரிந்தது. இது சாதாரண பயோபிக் அல்ல; உலகம் முழுவதும் பேசப்படும் திரைப்படமாக மாறும்” என்றார்.

இந்தப் படத்தில் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் யேசுதாஸ், தனது வேடத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்தில் இணைந்ததாகக் கூறி, ரசிகர்கள் படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ‘ராக்கெட்டரி’ படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகங்களை படித்தபோதுதான் அவரது சாதனைகளின் உண்மையான பரிமாணம் புரிந்ததாகவும், அவரின் கண்டுபிடிப்புகள் சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு பயன்பட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்ததால், அந்த பாரம்பரியத்தை திரைப்படம் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை இயக்கியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக பேசிய நடிகர் ஆர். மாதவன், “‘குரு’, ‘ராக்கெட்டரி’ போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்குப் பிறகு, ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய பொறுப்பாக இருந்தது. அவரைப் பற்றி எனக்கு ஆரம்பத்தில் அதிகம் தெரியாதது குற்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த திரைப்படம் அவரின் சாதனைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாகும். இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும், முழு படக்குழுவினருக்கும் என் நன்றி. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும்” என்றார்.

G.D. NaiduG.D.NI Knew Nothing About G.D. Naidu – Actor R. Madhavanmadhavan