மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

மலையாள சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘குப்பி’ படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, டொவினோ தாமஸ் மற்றும் ஜான்பால் ஜார்ஜ் இணைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவே இருவரும் மீண்டும் இணையும் புதிய பிரம்மாண்ட படத்திற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

திரையுலக வட்டார தகவல்களின்படி, இந்தப் படம் டொவினோ தாமஸ் மற்றும் ஜான்பால் ஜார்ஜ் இருவரின் திரைப்பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இந்தப் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணையவுள்ளார்.

2016-ல் வெளியான ‘குப்பி’, டொவினோ தாமஸின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் பொறியாளரான தேஜஸ் வர்க்கி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது. அதேபோல், ஜான்பால் ஜார்ஜின் இயக்குநர் அறிமுகப் படமாகவும் அது வெற்றி பெற்று, மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ‘தீவண்டி’, ‘கோதா’, ‘மாயநதி’, ‘மின்னல் முரளி’, ‘2018’, ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம் (ARM)’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் டொவினோ தாமஸ் இந்திய அளவில் கவனம் பெற்ற முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

மறுபுறம், ஜான்பால் ஜார்ஜ் இயக்கிய ‘அம்பிலி’ விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், ‘ரோமான்சாம்’ திரைப்படத்தை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்துடன், அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதிய படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Johnpaul GeorgeTovino ThomasTovino Thomas and Johnpaul George Reunite for a New Film