தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் புதிய மூன்று மாடி கான்கிரீட் கல்விக் கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளார். முன்பு சாதாரண மேற்கூரையுடன் இருந்த பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் இந்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்திற்கு “தனுஷ் பிளாக்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை இதே பள்ளியில் கல்வி பயின்ற தனுஷ், தனது பள்ளிக்கு நன்றிக்கடனாக இந்த உதவியை செய்திருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷுடன், அவரின் பள்ளித் தோழரும் ஒளிப்பதிவாளருமான குமரன், 1999-ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக, தனுஷ் தனது ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் ஆசிரியர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதே பள்ளியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை தனுஷுடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரனும், அவரது மனைவி லட்சுமி கிருபாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ஒளிப்பதிவாளர் குமரன், “நானும், என் மனைவியும், தனுஷும் இந்தப் பள்ளியில்தான் படித்தோம். பின்னர் பிளஸ் டூவை வேறு பள்ளியில் முடித்தோம். அதன் பிறகு தனுஷ் சினிமாவுக்குச் சென்றார்; நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாக திரைப்படத் துறைக்கு வந்தேன். பின்னர் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ போன்ற படங்களில் தனுஷுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

பள்ளியின் பழைய கட்டட நிலையை அறிந்த தனுஷ், யாரும் கேட்காமல் தானாகவே முன்வந்து இந்த புதிய கட்டடத்தை கட்டிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பள்ளியின் மற்ற கட்டடங்களையும் புதுப்பித்து, காலியாக உள்ள இடத்தில் மேலும் புதிய கட்டடங்களையும் அமைத்துத் தருவதாக கூறியது எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது” என்றார்.

தனது கல்வியை வழங்கிய பள்ளிக்கு நன்றிக்கடனாக நடிகர் தனுஷ் செய்துள்ள இந்த மனிதநேய செயல், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Actor Dhanush Builds a Three-Storey School Block for His Alma MaterDhanushதனுஷ்