ஹொம்பாலே பிலிம்ஸ் – ‘தி ஒன்’ சூர்யா – இயக்குநர் த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘S-48’
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியாக, ‘தி ஒன்’ சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட வலுவான கதைகளை திரைப்படமாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல், மற்றும் KGF, காந்தாரா, சலார் உள்ளிட்ட இந்திய அளவிலான பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் ஆகிய மூவரின் கூட்டணி, இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் தேசிய, சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்ற சூர்யா – த.செ. ஞானவேல் கூட்டணி, மீண்டும் இணைவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த முறை, அந்த கூட்டணிக்கு ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு பலம் சேர்த்துள்ளது.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில்,
“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக சூர்யா விளங்கி வருகிறார். வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வரும் அவருடன் இணைவது ஹொம்பாலே பிலிம்ஸுக்கு பெருமையான தருணம்.
அதேபோல், ‘ஜெய் பீம்’ போன்ற உலகம் முழுவதும் கவனம் பெற்ற திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், வலுவான கதைகளின் மூலம் ரசிகர்களை கவரும் திறமை கொண்டவர். மொழி, கலாச்சாரம் போன்ற எல்லைகளைத் தாண்டி உலகத் தரமான திரைப்படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அந்த நோக்கத்துடன் சூர்யாவும், த.செ. ஞானவேலும் எங்கள் குடும்பத்தில் இணைவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான படைப்புகளை பிரம்மாண்டமாக வழங்குவது ஹொம்பாலே பிலிம்ஸின் அடையாளம். அதே தொலைநோக்கு பார்வை கொண்ட கலைஞர்களுடன் இணைந்து புதிய அனுபவங்களை வழங்குவதே எங்கள் இலக்கு. இந்த கூட்டணியில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புதிய திரை அனுபவத்தை எதிர்பார்க்கலாம்,” என்றார்.
‘S-48’ திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கவனம் பெற்ற நடிகை கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை எஸ்.ஆர். கதிர், தயாரிப்பு வடிவமைப்பை கே. கதிர், படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் மேற்கொள்கின்றனர். திரைக்கதையில் பா. கிருத்திகா பங்களிப்பு செய்துள்ளார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. ஜூலை 22 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.