‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை போற்றும் வகையில் ‘அமரன்’ படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘அமரன் படம், உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே.!
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார். ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுத்ததால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்குச் சென்றே படப்பிடிப்பு நடத்தியது படக்குழு. படப்பிடிப்பின் போதே, ராணுவ வீரர்களின் பாராட்டினை படக்குழு பெற்றது.
அதேபோல், ராணுவ வீரர்களுக்கு படக்குழு படம் ரிலீஸ்க்கு முன்னர் சிறப்பு திரையிடல் செய்தது. இதனைப் பார்த்த ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படக்குழுவினரை பாராட்டினர். அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினருடன் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ் கலந்து கொண்டார். ‘அமரன்’ படத்தின் கதைக்கருவாக இயக்குனர் சொல்ல வந்தது என்னவென்றால், சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து, காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார்.
முன்னதாக, தனது நீண்டநாள் காதலியான இந்துவின் (சாய் பல்லவி) பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை. இதில், காட்சி அமைப்புகளில்.. கல்லூரி மாணவராக வரும் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபடுவதே லட்சியம் என இருக்கிறார். இந்நிலையில், சாய்பல்லவியை காதலிக்கிறார். திருமணத்திற்கு சாய் பல்லவியின் வீட்டில் சம்மதம் இல்லை. பின்னர், சமாதானம் செய்து திருமணம் முடிக்கிறார்.
இச்சூழலில், சிவகார்த்திகேயனுக்கு காஷ்மீரில் ராணுவ வீரருக்கான பணி கிடைக்கிறது. தீவிரவாதிகளை எதிர்த்து மக்களை காப்பாற்றி போரிட்டு தனது இன்னுயிரை துறக்கிறார்’ என ‘அமரன்’ திரையோட்டம் விறுவிறுப்பாய் பயணிக்கிறது. திரைக்கதையானது, சாய் பல்லவியின் பாயிண்ட் ஆஃப் வியூவில் நகர்கிறது. ‘இந்து’ என்கிற சாய் பல்லவி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன் மிலிட்டரி மேனாக வாழ்ந்திருக்கிறார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி, மேஜரின் வரலாற்றை சினிமாவுக்கு ஏற்ப சுவாரசியமாய் சொல்ல முயன்றதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிவகார்த்திகேயனின் பெற்றோராக வருபவர்கள், சாய் பல்லவியின் தந்தை மற்றும் அண்ணன்கள், மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமி என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஆக்ஷன் காட்சிகளில் தீவிரத்தை உணர்த்தும் படப்பிடிப்பு மிக அருமை. அன்பறிவ்வின் ஸ்டண்ட் காட்சிகள் அற்புதம்.
அமரன், விறுவிறுப்பானவன், ஆக்ஷனில் தாராளமானவன் எனலாம். இதுவரையில், யாருமே எதிர்மறையாக விமர்சனம் கொடுக்கவில்லை. அந்தளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் இது ஒரு மைல் கல். புதிய பரிமாணம்.! தமிழ்நாட்டில் தாம்பரத்தில் பிறந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருக்கிறார். சாய் பல்லவியின் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது.
இடைவேளை காட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இந்திய இராணுவத்தின் முகம். லவ்வர் பாயாகவும், ராணுவ வீரராகவும் சிவகார்த்தி ஜொலிக்கிறார். இடைவேளையில், பயங்கரவாதிகளை வீழ்த்திய பிறகு, “இது இராணுவத்தின் முகம்” என்று பயங்கரமான டயலாக் பேசுகிறார். சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் கதைக்களத்திற்கு உயிரூட்டி இருக்கிறது.
முன்னதாக, ‘அமரன்’ படத்தை பார்த்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியார் மற்றும் ராணுவ வீரர்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும், சென்சார் அதிகாரிகளும் நற்சான்றிதழ் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இப்படத்தை தயாரித்த உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பட க் குழுவினருடன் ‘அமரன்’ படம் பார்த்து ‘பிக் சல்யூட்’ என கருத்து பதிவிட்டிருந்தார்.
மேலும் பப்ளிக் ரிவ்யூவும் படத்திற்கு பெரிதான வரவேற்பு கொடுத்து வருகின்றது; நாமும் வரவேற்போம்.!
‘அமரன்’ பாரதமே போற்றும் புனிதன்.. ஜெய்ஹிந்த்.!