‘நகைச்சுவை விருந்தான’ பிரதர் – ப்ளடி பெக்கர் திரைப்படங்கள்: முதல் நாள் கலெக்சன் விவரம்..
நேற்றைய திரைப்பட வசூல் சாதனையை, இன்றைய திரைப்படம் முறியடிப்பதும், இன்றைய திரைப்படத்தை நாளைய திரைப்படம் முறியடிப்பதும் வாடிக்கைதானே.
அவ்வகையில், தீபாவளி பண்டிகையில் ரிலீஸான ‘ பிரதர்’ மற்றும் ‘ பிளடி பெக்கர்’ படங்களின் வசூல் விவரம் குறித்து பார்ப்போம்..
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, கவின் நடிப்பில் உருவான ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ ஆகிய மூன்று தமிழ் படங்கள் வெளியானது.
தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், இந்த படங்கள் ஒவ்வொன்றுமே, தனித்துவமான கதைக்களத்தில் வெளியாகி உள்ளதால், ரசிகர்களும் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், அமரன் திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 30 கோடி வசூலை ஈட்டியதாக தகவல் வெளியான நிலையில், கவின் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் வசூல் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கவின்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், அதிலிருந்து வெளியே வந்த பின்னர் தொடர்ந்து தன்னுடைய சினிமா கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார், ஆகிய படங்கள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் கவின் நடித்த திரைப்படம் தான் ‘ப்ளடி பெக்கர்’. பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கவின், இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடியை நம்பி களமிறங்கி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
திரையரங்கில், ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடித்துள்ள, இப்படம் முதல் நாளில் 2.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருவதால், நெல்சன் திலிப் குமார் தன்னுடைய முதல் படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி உள்ளார். கவினை தவிர, ரெடிங்ஸ் கிங்ஸ்லி, சுனில் சுகந்தா, டி எம் கார்த்திக், ராதா ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள மற்றொரு காமெடி டிராமா திரைப்படம் பிரதர். ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்தை, இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி உள்ளார்.
சுந்தர் ஆறுமுகம், கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நடராஜ், ராவ் ரமேஷ், வி டி வி கணேஷ், சதீஷ் கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம், முதல் நாளில் ரூபாய்.2.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தத்தில், ப்ளடி பெக்கர், மற்றும் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ஆகிய இரு படங்கள் ரசிகர்கள் மத்தியில் சமமான வரவேற்பை பெற்று வருகிறது.
மகிழ்ச்சியை பரிமாறினால், யாருக்கும் பிடிக்கும் தானே.!