இது சட்டவிரோத சிறைக்காவல்: நடிகர் அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் வாதம்..
அல்லு அர்ஜூனின் ஒருநாள் இரவு சிறைக்காவல் குறித்து, அவரது வழக்கறிஞர் கூறிய விவரம் காண்போம்..
தெலுங்கானாவில், புஷ்பா-2 பட பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜூன் மட்டுமின்றி அவருடன் திரையரங்கு உரிமையாளர், பாதுகாப்பு அதிகாரிகளையும் கைது செய்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது.
எனினும், அவருக்கான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் சஞ்சல்குடா சிறையில் அல்லு அர்ஜூன் அடைக்கப்பட்டார்.
ஒருநாள் இரவு முழுவதும் சிறைவாசம் அனுபவித்த அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறார்.
இச்சூழலில், அல்லு அர்ஜூன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘உரிய ஆவணங்கள் கிடைத்த போதிலும் போலீசார் அல்லு அர்ஜூனை விடுவிக்கவில்லை. இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இது சட்ட விரோத காவல். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜூன் கைதான நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.