பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் டீசர் வெளியானது

Web Ads

பன்முகத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் பகத் பாசில், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அணியுடன் இணைந்துள்ள புதிய திரைப்படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’. வித்தியாசமான கற்பனை உலகை மையமாகக் கொண்ட இப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Showing Business நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா, ‘பாகுபலி’ படங்களை தயாரித்த Arka Media Works நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோரும் தயாரிப்பில் பங்கேற்றுள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ள இப்படம், கற்பனை, நகைச்சுவை மற்றும் சாகசம் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் சமீபத்தில் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. டீசரில், ஒரு சிறுமிக்கு பகத் பாசில் மேஜிக் செய்து காட்டும் காட்சியுடன் தொடங்குகிறது. இருவருக்கும் இடையிலான அழகான பாசப் பிணைப்பு மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது.

அதன்பின், அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்து மிகப்பெரிய வித்தையை நிகழ்த்துவதாக பகத் பாசில் கூறுகிறார். ஆனால் அந்த வித்தையே எதிர்பாராத சிக்கலை உருவாக்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே படத்தின் முக்கியக் கதையாக அமைகின்றன.

வித்தியாசமான கதை, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் கற்பனை உலகை இணைத்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃபஹத் பாசிலின் இயல்பான நடிப்பும், சிறுமியின் வசீகரமான திரைநிகழ்வும் டீசருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.

மேலும், காள பைரவாவின் பின்னணி இசை, தரமான ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் டீசரின் தரத்தை உயர்த்தியுள்ளன.

‘Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகளை விரைவில் படக்குழு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.