விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ படத்தில் தபுவின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. ஆக்ஷன் டிராமா ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், படத்தில் சக்திவாய்ந்த அதிகாரியான கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபுவின் பிரத்யேக ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியாகியுள்ளது. முன்னதாக அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியான இந்த கிளிம்ப்ஸ் அவரது கதாபாத்திரத்தின் வீரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நகரின் சேரிப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ், படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. காரில் கம்பீரமாக வரும் தபு, சிகரெட்டைப் பற்ற வைத்தபடி அங்குள்ள சூழலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உள்ளூர் ரவுடி ஒருவரை எச்சரிப்பதுடன், அவருக்கு எதிராக அதிரடியாக செயல்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அச்சமின்றி, எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல் செயல்படும் அதிகாரியாக தபு இந்த கிளிம்ப்ஸில் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். காவல்துறையினரும், பொதுமக்களும் சூழ்ந்திருந்தாலும், தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்கும் காட்சிகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
கிளிம்ப்ஸின் இறுதியில், “கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை” என தபு தன்னை அறிமுகப்படுத்தும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தபுவின் கம்பீரமான நடிப்பும், கதாபாத்திர வடிவமைப்பும் ‘கௌரி ஹெக்டே’ கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் வழக்கமான பாணியில், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்ஹாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை சாம் கே. நாயுடுவும், இசையை ஹர்ஷவர்தன் ராமேஸ்வரும், படத்தொகுப்பை சந்தோஷ் நூஜில்லாவும் கவனிக்கின்றனர். அனில் பாடூரி VFX பணிகளை மேற்கொள்கிறார்.
பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் தற்போது வெளியாகியுள்ள கேரக்டர் கிளிம்ப்ஸ் ஆகியவற்றின் மூலம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாக உள்ளது.