நாளை ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்துக்கு, சென்சார் எதிர்ப்பு
‘கண்ணப்பா’ படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் காண்போம்..
பாலிவுட் சினிமாவில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள புராண படம் ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
இதில் சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய்குமார் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை காட்சிகளுக்கும் சில வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்றனர்.
இதையடுத்து, மறு ஆய்வுக் குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டது. அதிகமான ரத்தம், இறந்த உடல்கள், மனித உடலை அம்பு துளையிடும் காட்சிகள் உள்பட பல காட்சிகளை நீக்க, மறு ஆய்வுக் குழு அறிவுறுத்தியது. சில வசனங்களை நீக்கவும் சிலவற்றை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டது. பின்னர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
வழக்கமாகப் புராண படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்குவதுதான் நடைமுறை. மாற்றங்களுக்குப் பிறகு படத்தின் நீளம் 3 மணி நேரம் 2 நிமிடம் 51 விநாடிகளாக உள்ளது. முன்னதாக, இப்படத்தை தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த் பார்த்து படக்குழுவை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.