நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது காதலியை இன்று மணந்தார்
நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம்.
திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார்.
அண்மையில், தனுஷின் 50-வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது.
இது தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதைகள்’ என்கிற ஆந்தலஜி படத்தில் திருநங்கையாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார். மேலும், ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இவர், தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவரை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது.
இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காளிங்கராயர் ஜோடியின் திருமணம் இன்று கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
‘குருவாயூரப்பா.. குருவாயூரப்பா.. நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி..’ என்ற பாடல் மனசுக்குள் ஒலித்ததா? என காளிதாஸிடம் நாளையொரு நாள் நேர்காணலில் கேட்டு விடுவோம்.
தற்போது இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ள காளிதாஸுக்கு, வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
காளிதாஸின் காதலி தாரிணி காளிங்கராயர் ஊத்துக்குளி ஜமீனின் வாரிசு ஆவார். இதன்மூலம் ஜமீன் வீட்டு மாப்பிள்ளை ஆகியிருக்கிறார் காளிதாஸ்.
இவர்களின் வெட்டிங் ரிசப்ஷனில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருமனமும் ஒருமனமாய் இணைந்து, இன்று திருமணமும் நறுமணமாய் கமழ்ந்து விட்டது. இனி, வேறென்ன.. இல்லறம் என்றும் இனிப்பாய் நிலைக்கட்டும்.!