“கேள்வி கேட்பதிலும் கண்ணியம் அவசியம்”: பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை குறித்து மாளவிகா மோகனன் ஆவேசம்!

சமீபகாலமாக சினிமா விழாக்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேட்கப்படும் சில தேவையற்ற கேள்விகள் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. அந்த வகையில், பிரபல தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் ஒரு தனியார் விழாவில் கலந்துகொண்டபோது நடந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் விழா ஒன்றில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா மாதிரி பயணிப்பீர்களா?” என்ற முற்றிலும் அநாவசியமான கேள்வியை எழுப்பினார்.
கேள்வியின் நோக்கம் தவறாக இருந்ததை உணர்ந்த மாளவிகா, அந்த இடத்திலேயே சற்றும் தயங்காமல், “இது முற்றிலும் தேவையற்ற கேள்வி” என்று கூறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது.
இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகை மாளவிகா மோகனன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊடகங்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்திய அதே வேளையில், எல்லை மீறும் சிலரின் போக்கை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களில் ஓரிருவர் முற்றிலும் தேவையற்றதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கமுடையதுமான, மிகவும் நாகரிகமற்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.”
தளபதி விஜய் குறித்து கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவருடன் தனக்கிருக்கும் நட்பு மற்றும் மரியாதை குறித்தும் மாளவிகா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
7 ஆண்டு கால நட்பு: “விஜய்யை எனக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்.”
பெருமகிழ்ச்சி: “அவரை ஒரு நண்பராகக் கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப் பயணத்தை உற்று நோக்குவது, வியக்கத்தக்க ஓர் அனுபவமாகவே இருந்து வருகிறது.”
இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மாளவிகா, “இனிவரும் காலங்களில் ஊடகங்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் கருதி, கண்ணியத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் அமைந்தால் பெரிதும் வரவேற்பேன்,” என்று தனது பதிவை முடித்துள்ளார்.
பின்னணி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகளைத் தவறாகச் சித்தரிக்கும் விதமாகத் தரம் தாழ்ந்த கேள்விகளைக் கேட்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்ற மாளவிகாவின் இந்த தைரியமான கருத்திற்கு, சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது.
