ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அசோக் செல்வன்!

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா செல்வம், ‘அன்பில் அவன்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். படத்தின் வெற்றியில் படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
படத்தின் விளம்பரப் பணிகள் குறித்து பேசிய தயாரிப்பாளர் மற்றும் Director of Promotions கவிதா, படம் வெளியானதிலிருந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டது படக்குழுவுக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் அவர் கூறினார்.
கலை இயக்குநர் மணிகண்டன், காஸ்ட்யூம் டிசைனர் பெனிடா, கிரியேட்டிவ் புரொடியூசர் ஆப்ரஹாம், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சேது உள்ளிட்ட படக்குழுவினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில், படத்தை ரசிகர்கள் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், தாங்கள் உருவாக்கிய திரைப்படம் மக்களிடம் சரியாகச் சென்றடைவதும் முக்கியம் என்றும், ‘அன்பில் அவன்’ படத்தைப் பொறுத்தவரை இரண்டுமே நடந்துள்ளதாகவும் கூறினார். நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடிகர் கதிர்பாலு, ‘அன்பில் அவன்’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளதாகவும், தனக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் ஆகாஷ், தனது குறும்படத்தைப் பார்த்து இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய அசோக் செல்வன் மற்றும் இயக்குநர் கார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் வழங்கிய விமர்சனங்களுக்கும் ரசிகர்கள் அளித்த அன்புக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் பெண்கள் படத்துடன் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியளித்ததாக கூறிய அவர், ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடுவது மிகப்பெரிய விஷயம் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன், படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். காதல் கதையாகத் தொடங்கி த்ரில்லர், ஆக்ஷன் என பல்வேறு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.
மேலும், புதிய திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு வழங்கியதாகவும், ‘அன்பில் அவன்’ திரைப்படம் காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் படமாக ரசிகர்களிடம் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அசோக் செல்வன் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’, காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
