அமீர் நடிக்கும் மாகாளி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்றது. திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டங்களையும் பதிவு செய்யும் வகையில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
