ஆஸ்கர் விருதுக்காக 4-வது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயார்: நடிகர் சூரஜ் சுவாரஸ்ய தகவல்..

பிரபல மலையாள நடிகர் சூரஜ், தான் ஆஸ்கர் விருதைப் பெறும் முயற்சியை கூறியுள்ளார். அவரது கலகல பேச்சு காண்போம்..

‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ‘கலைவாணி’ கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூரஜ் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது:

‘எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, முதன்முறையாக கேரள மாநில அரசு விருதை வழங்கியது. பின்னர், இரண்டாவது குழந்தை பிறந்தபோது எனக்கு இரண்டாவதாக சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருது கிடைத்தது.

இது நல்லா இருக்கேனு, மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை எனக்கு பிறந்திருக்கிறது. இப்போது, எனக்கு கேரள அரசின் மாநில விருதோடு, முதன் முறையாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

இனி, எனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றால், அதற்காக நான் நான்காவது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என சூரஜ் கூறியதை கேட்டு, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம், இயக்குனர் அருண்குமார் உள்பட அனைவரின் சிரிப்பலையால் அரங்கமே அதிர்ந்தது.

 

veera dheera sooran movie actor suraj speech viral
Actor Vikramawardsveera dheera sooran movieஆஸ்கர் விருதுநடிகர் சூரஜ்