‘செல்வம் பொதுவுடைமை ஆகவில்லை; அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே’ என அகமகிழ்ந்துள்ளார் வைரமுத்து. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக பழைய பாடல்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்து அல்லது அப்படியே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தந்த பாடல்களின் இசையமைப்பாளர்கள் அல்லது பாடல் உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெற்று, பயன்படுத்தும் பொழுது பிரச்சினை எழுவதில்லை. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும் பொழுது அது காப்பிரைட்ஸ் பிரச்சினையாக எழுகிறது.
சில இசையமைப்பாளர்கள், படத்தின் உரிமையாளர்கள் பெரிய மனது செய்து தங்கள் பாடலை பயன்படுத்திக் கொள்ள விட்டு விடுகிறார்கள். ஆனால், இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் அவர் இசையமைத்த பாடல்களை அவரிடம் தெரிவிக்காமல் பயன்படுத்தியதற்காக, நீதிமன்றங்களில் வழக்கும் தொடுக்கிறார்கள். அவ்வகையில், தற்போது வைரமுத்துவும் தனது பல்லவிகளை திரைப்படத் தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ஆதங்கத்துடன் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது குறித்து, வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா..?
பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்.. இப்படி இன்னும் பல.
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.
ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.