எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா – கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்

‘இசை மேதை’ மற்றும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘எம். எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்ற இந்த அரங்கில் நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், அவரது பாடல்களை இசைக் கலைஞர்கள் இணைந்து இசைத்து இசையஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் கௌதம் தின்னனூரி பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் இடம்பெற்ற தியாகம், அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட அம்சங்களை திரைப்படத்தில் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார். இப்படத்தை உருவாக்குவதற்காக அவரது வாழ்க்கை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவது பலரது நீண்டகால கனவு என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக அனிருத் இசையிலும், ராஷ்மிகா நடிப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், சுமார் ஏழு ஆண்டுகளாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார். அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் தற்போது இப்படம் உருவாகி வருவதாகவும் கூறினார்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள், அவரது ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் இசை மீதான ஆழமான நம்பிக்கை ஆகியவற்றை திரைப்படத்தில் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இளம் தலைமுறையினருக்கும் முந்தைய தலைமுறையினருக்கும் இடையே இசைப் பாலமாக அனிருத் இருப்பதால், இப்படத்திற்கு அவர் இசையமைப்பது முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மிகப்பெரிய பொறுப்பு என்றும், தனது சிறந்த பங்களிப்பை இப்படத்திற்கு வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், எம்.எஸ். சுப்புலட்சுமி இசையின் மூலம் மக்களை ஒன்றிணைத்தவர் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார். மேலும், ராஷ்மிகா எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடிக்க வேண்டும் என்றும், இயக்குநர் கௌதம் தின்னனூரிக்கு இது மிகப்பெரிய பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அனிருத்துக்கு இப்படம் இசையமைப்பில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த கமல்ஹாசன், தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேசினார்.

‘எம். எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்படத்தின் தொடக்க விழா நிறைவடைந்துள்ள நிலையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை ராஷ்மிகா மந்தனா எவ்வாறு திரையில் பிரதிபலிக்க உள்ளார் என்பதையும், அனிருத்தின் இசை எப்படியிருக்கும் என்பதையும் அறிய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Kamal Haasanms. subbulakshmiRashmika MandannaRashmika Mandanna to Star in MS Subbulakshmi Biopic Kamal Haasan Gives the First Clap