டி.ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்கும் திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

பன்முகக் கலைஞர் டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில், அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. டி. ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படமும் இதுவாகும்.

படம் முழுவதும் நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் தோன்றும் பாக்யராஜ், முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதேபோல், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் இதுவாகும். இதில் இருவரும் கணவன் – மனைவியாக நடித்துள்ளனர்.

இப்படத்தில் புதுமுகங்களான அமல் அஜித் மற்றும் ஆதியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகின்றனர்.

- Advertisement -

தெலுங்கில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்காரும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வேதா என்ற நடிகையும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர். சதீஷ் குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை பவர் பாண்டியன் மேற்கொண்டுள்ளார்.

1990களில் தமிழ்நாடு – கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

IlaiyaraajaIlaiyaraaja Sings for the First Time in T Rajendar’s MusicKannadathu PaingiliT.Rajendar