ராவடி படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

பேசில் ஜோசப் மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ (Raawadi) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ (Gujili Masthu) பாடல் மற்றும் அதன் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் நடைபெற்ற நிகழ்வில் படக்குழுவினர் பாடலை வெளியிட்டனர்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பேசில் ஜோசப், ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எல்.கே. அக்ஷய் குமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையிலான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்துள்ளார். எல்.கே. விஷ்ணுகுமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ராவடி’ படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ வெளியாகி மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தற்போது இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை செம்வி மற்றும் ராம் சே ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். அந்தோணி தாசன் மற்றும் ஜென் மார்ட்டின் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் இளைஞர்களை நடனமாடத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

‘வணக்கம்! எவ்ரிபடி… குஜிலி மஸ்து… எல்லாரும் மஜா பண்ண ரெடியா இருக்கீங்களா!’ எனத் தொடங்கும் பாடலில், ‘அராஜகம் பத்தல பத்தல… பப்பரப்பப்பா குஜிலி மஸ்து’ போன்ற உற்சாகமூட்டும் வரிகள் இடம்பெற்றுள்ளன. திரையரங்கில் திரைப்படத்தை ரசித்துக் கொண்டாடும் ரசிகர்கள், பேசில் ஜோசப்பின் ஸ்டைலான தோற்றம், நடனக் கலைஞர்கள், ஹூக் ஸ்டெப்ஸ், நண்பர்களுக்கிடையேயான நட்பு, கல்லூரி விடுதியில் சீனியர் – ஜூனியர் உறவுகள் என இளமைத் துள்ளல் நிறைந்த காட்சிகள் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

பாடல் முழுவதும் இளமை, நட்பு மற்றும் கொண்டாட்டத்தை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘குஜிலி மஸ்து’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

basil josephGujili Masthu Music VideoLK Akshay KumarRaawadiRaawadi’s Second Song Released