விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், தொடர்ந்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் நகர்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலுக்குப் பின்னால் என்ன காரணம் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கதையின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

டீசரில் விஜய் சேதுபதி பல்வேறு தோற்றங்களிலும், வித்தியாசமான பரிமாணங்களிலும் தோன்றுகிறார். ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் இருக்கும் கதை என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதால், ‘பத்தா’ படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

80s காலகட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகள்!

- Advertisement -

1980களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் படத்தின் காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தின் உடைகள், தோற்றம், வாழ்வியல் சூழல் மற்றும் சினிமா பாணியை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

ஏற்கனவே ‘மகளே’ பாடல் மூலம் 80s காலகட்டத்தின் இசை உணர்வை அறிமுகப்படுத்தியிருந்த படக்குழு, தற்போது டீசர் மூலமும் அதே காலகட்டத்தின் பின்னணியை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘மகளே’ பாடல் மூலம் மென்மையான மெலடி இசையில் கவனம் ஈர்த்திருந்த அவரது இசை, தற்போது டீசரிலும் படத்தின் காலகட்டத்துக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் இடம்பெற்றுள்ளது.

வழக்கமான டீசர் பாணியில் கதையின் மையத்தை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்கள், மர்மம், காட்சியமைப்பு மற்றும் காலகட்டத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது ‘பத்தா’ டீசர். விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள், 80s பின்னணி மற்றும் சாய் அப்யங்கரின் இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் உள்ளிட்டோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. ‘மகளே’ பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

BaththaLijo MolVijay SethupathiVijay Sethupathi’s Baththa Teaser Released