400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு முயற்சியின் மூலம் 400 ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது கணவர் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இப்படம், 1870-களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா ‘ஜெயம்மா’ என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பஞ்சத்தால் மக்கள் எதிர்கொண்ட துயரங்களை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடித்த அனுபவம், நிஜ வாழ்க்கையிலும் பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தைத் தன்னுள் ஏற்படுத்தியதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கும் மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஓராண்டு முழுவதும் சுழற்சி முறையில் உணவுப் பொருட்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, கோதுமை மாவு, ராகி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோயா துண்டுகள், சர்க்கரை, தேயிலைத் தூள் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தான் மேற்கொண்ட சமூகநல உதவிகளைப் பெரும்பாலும் வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருந்த ராஷ்மிகா, தற்போது மற்றவர்களும் இதுபோன்ற உதவிகளைச் செய்ய ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த முயற்சியைப் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், திரைப்படங்களுக்காகத் தான் மேற்கொள்ளும் கடின உழைப்பு, தூக்கமில்லாத இரவுகள், காயங்கள், கண்ணீர் என அனைத்தையும் கடந்து கிடைக்கும் மகிழ்ச்சியை விட, உதவி பெறும் மக்களின் முகத்தில் தெரியும் புன்னகை தனக்கு அதிக மனநிறைவை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவு குறைவதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் பணத்தைச் சேமித்து, எதிர்காலத்தைச் சிறப்பாகத் திட்டமிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘ரணபலி’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, 400 குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் இந்த முயற்சிக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Rashmika MandannaRashmika Mandanna Adopts 400 Underprivileged Families