கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சதீஷ் எம்.பி. தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இன்று வெளியிட்டனர்.
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- Advertisement -
மேலும், பருத்திவீரன் சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ், இயக்குநர் தமிழ், சித்ரா லட்சுமணன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, சுபிக்ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதுவரை நடித்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சண்முக பாண்டியன் இடம்பெற்றுள்ளார். பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற எதார்த்தமான தோற்றத்தில் அவர் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளார். குறிப்பாக, அதிரடியான சண்டைக் காட்சிகளில் தனது தந்தை விஜயகாந்தை நினைவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் மோகன் ராஜாவின் தோற்றமும் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இப்படத்தின் இசை உரிமையைப் பிரபல ஆடியோ நிறுவனமான லஹரி (Lahari) பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.