சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ‘கூலி’ படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவாவில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ந்தேதிமுதல் நவம்பர் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
அவ்வகையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி வரவேற்பு பெற்ற ‘அமரன்’ படமும் திரையிடப்படுகிறது.