நடிகர் கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்!

நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் 25வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர், கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடுத்தர வயது காவல்துறை அதிகாரி அதியமான் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா தீவிரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

குற்றச் சம்பவ இடம், இரத்தக்கறை படிந்த கோப்புகள், கைவிடப்பட்ட காவல்துறை தொப்பி, சிதறிக்கிடக்கும் ஆதாரங்கள், கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இணைந்து, படத்தின் மர்மமான உலகை வெளிப்படுத்துகின்றன. இது சாதாரண குற்றக் கதையை விட வித்தியாசமான புலனாய்வு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்தப் படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர். பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், கலைமாமணி சரவணன், பத்மஸ்ரீ ஐ.எம். விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா மற்றும் பேபி நைனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஞ்சன் இசையமைக்கும் இப்படத்திற்கு டி. கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவின் ஆதித்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், வெங்கட் பாலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். வசனங்களை ‘கோடங்கி’ வடிவேல் எழுதியுள்ளார்.

குற்றாலம் மற்றும் கேரளாவின் இயற்கை எழில் மிக்க பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் மற்றும் தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகும் ‘மர்டர் இன் டவுன்’, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Krishna's 25th Film 'Murder in Town'Bala SaravananBindu MadhaviChinni JayanthKalaimamani SaravananKrishnaMurder in TownR. PandiarajanVaibhav Murugesan