ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘லவ் லாக்’ (Love Lock). ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் D.K. கார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் நடைபெற்றது.
‘லவ் லாக்’ திரைப்படத்தில் D.K. கார்த்திகேயன், கௌசல்யா, லாவண்யா, ராஜ் MRK, அன்பழகன், ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரசோமிகின் (Razomikhln) ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மூன்ராக்ஸ் (MoonRoxx) இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள, கலை இயக்குநராக எஸ்.ஏ. ராஜா பணியாற்றுகிறார். லவ் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஆர். சிவராமன் தயாரிக்கிறார்.
கடந்த நவம்பர் 15, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எட்வின் GJ கூறியதாவது:
“ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிக்கிறார்கள் என்ற இயல்பான கதையாக இருந்தாலும், பறவையின் மென்மையான இறகின் மீது கடினமான பாறாங்கல்லை வைத்தால் அந்த இறகின் எதிர்வினை என்னவாக இருக்கும்? என்ற வித்தியாசமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வியலுடன் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இப்படத்தை உருவாக்குகிறோம்.
இப்படத்தில் நடிகை கௌசல்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையைக் கேட்டவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதை எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன். லாவண்யா கதையின் நாயகியாக நடிக்கிறார். கதையைக் கேட்டதும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்று கூறி அவர் ஒப்புக்கொண்டார்.
நடிகர் ராஜ் MRK, ரஜினி ரசிகராகக் கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு நாயகனான கார்த்திகேயன் அமைதியான, கவிதைகள் எழுதும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.
நடிகை கௌசல்யா பேசியதாவது:
- Advertisement -
“ஒரு காதல் கதையை மிகவும் எளிமையான திரைமொழியில் இயக்குநர் என்னிடம் விவரித்தார். கதையைக் கேட்கும்போதே காதலை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சொல்லியிருப்பதாக உணர்ந்தேன். தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். பெற்றோர்கள் எப்போதும் காதலைப் பூட்டி வைத்திருப்பார்கள். அதுபோன்ற காதல் மீதான ஒரு பூட்டு இருக்கும் கதாபாத்திரத்தில்தான் இப்படத்தில் நான் நடிக்கிறேன்” என்றார்.
நடிகர் D.K. கார்த்திகேயன் கூறியதாவது:
“இதற்கு முன்பு இணையத் தொடர்களிலும், ‘மொத ராத்திரி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன். தற்போது ‘லவ் லாக்’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறேன். தொடர்ந்து ஊடகங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை லாவண்யா அன்பழகன் பேசியதாவது:
“இது என்னுடைய முதல் திரைப்படம். அதிலும் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிக்கும் முதல் படம். கதையைக் கேட்டபோதே மிகவும் பிடித்திருந்தது. படத்தின் தலைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. இளமையான, உற்சாகமான படக்குழுவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக கௌசல்யா மேடத்துடன் இணைந்து நடிக்க இருப்பது எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.
நடிகர் ராஜ் MRK கூறியதாவது:
“குறும்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நான், தற்போது இப்படத்தின் மூலம் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிறேன். அற்புதமான கதை. நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் ஆர். சிவராமன் பேசியதாவது:
“இளமையான மற்றும் திறமையான புதிய தலைமுறை கலைஞர்களைக் கொண்ட குழுவாக இப்படக்குழு அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஊடகங்களின் ஆதரவு தேவை” என்றார்.
‘லவ் லாக்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.