83 வயதிலும் குறையாத இசைத் தேடல்… 2,000 கி.மீ பயணம் செய்த இளையராஜா!

மராத்தி மொழியில் உருவாகி, ஆஸ்கர் விருதுக்கான பயணத்தில் இடம்பெற்றுள்ள ‘கோந்தல்’ (Gondhal) திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா மேற்கொண்ட தனித்துவமான முயற்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்தோஷ் தவக்கர், ‘வெரைட்டி இந்தியா’ (Variety India) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இளையராஜா படத்திற்காக இசையமைத்த விதம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா, கோந்தல் கலை மற்றும் அதன் இசை மரபுகளை நேரில் அறிந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து பாரம்பரிய கீர்த்தனைகள், சடங்கு சார்ந்த இசை, கோந்தல் நிகழ்ச்சிகள் மற்றும் கோந்தலி கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசித்தார்.

- Advertisement -

திரைப்படத்திற்கான இசையை உருவாக்குவதற்கு முன்பாக அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான பின்னணியைப் புரிந்துகொள்ள அவர் விரும்பினார். இயக்குநரின் விளக்கத்தை மட்டுமே நம்பாமல், அந்த மரபுகளை நேரில் அனுபவித்து, அதன் பிறகே சென்னை திரும்பி படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கும்போது கதையையும், கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் கேட்டறிந்து, படத்தைப் பார்த்து இசையமைப்பது வழக்கமான நடைமுறை. ஆனால், 83 வயதிலும் அதையும் தாண்டி, படத்தின் கலாச்சாரப் பின்னணியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள சுமார் 2,000 கி.மீ பயணம் செய்து, இரண்டு நாட்கள் நேரடியாக அந்தக் கலையை அனுபவித்திருக்கிறார் இளையராஜா.

கோந்தல் கலையின் இசை மரபுகளையும், கலாச்சார அடையாளத்தையும் அதன் உண்மையான உயிரோட்டத்துடன் தனது இசையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற அவரது இந்த முயற்சி, இசையின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் தேடலையும் வெளிப்படுத்துகிறது.

வயது ஒரு தடையல்ல… இசையின் மீதான காதலும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதையும் தேடிச் சென்று கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இளையராஜாவின் இந்தச் செயல் ஒரு சிறந்த உதாரணம்!

GondhalIlaiyaraajaIlaiyaraaja’s Passion for Music at 83... Travels 2000 KM for Musical Research