வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்ட தயாரிப்பில், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் தனது நடிப்பு அணுகுமுறையையே மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து பேசிய நிமிஷா சஜயன், “இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளேன். ஆனால், ‘என்ன விலை’ எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. இயக்குநர் சஜீவ் பழூர், நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு விசாரணைகளை நேரில் கவனிக்குமாறு கூறினார். அதற்கு முன்பு வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் பார்த்தபோது, அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் மிகவும் இயல்பாக இருந்தது. அந்த அனுபவம்தான் நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களை வெளிப்படுத்திய விதத்தை முழுமையாக மாற்றியது” என்றார்.
மேலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் சஜீவ் பழூருடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். “நான் கதாநாயகியாக அறிமுகமான ‘தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். தற்போது அவர் எழுதி இயக்கிய ‘என்ன விலை’ படத்தில் நடித்திருப்பது மிகவும் சிறப்பான அனுபவம். அவரது எழுத்தின் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அவரது பார்வையையும் திறமையையும் நெருக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இந்த முக்கியமான பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் கடலில் வீசும் நாணயங்களை எடுத்து வாழ்வாதாரம் நடத்தும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனித கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் சட்டப் போராட்டம் ஆகியவற்றை பேசும் இந்தக் கதை, பின்னர் நாடு முழுவதும் கவனம் ஈர்க்கும் நீதிமன்ற வழக்காக மாறுகிறது.
இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலாமயா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். கிதேஷ் வி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
மனிதநேயம், சமூக பொறுப்பு மற்றும் நீதிக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘என்ன விலை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.