சினிமா பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் மாதவி, தற்போது திரையுலகில் பாடகியாக அறிமுகமாகிறார்.

தென் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மாதவியின் வில்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றால், ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருவது வழக்கம். தனது தனித்துவமான குரல் மற்றும் நாட்டுப்புற இசை பங்களிப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ள மாதவி, பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.

இந்நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் பாடகியாக களமிறங்குகிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், அவர் பாடியுள்ள ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தில், அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வீரம், தெய்வ நம்பிக்கை மற்றும் மண்ணின் அடையாளம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை, ‘பம்பர்’ பட இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வில்லுப்பாட்டு மாதவி ‘வேட்ட சாமி’ படத்தில் பாடியுள்ள தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

madhaviVillupattu Madhavi Makes Her Debut as a Playback Singer!