நகைச்சுவையுடன் மனதை தொடும் அழகான கதை உள்ள படம் ‘கான் சிட்டி’!

‘கான் சிட்டி’ டிரெய்லர் வெளியீடு: அர்ஜூன் தாஸ் நடிப்பில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாக திரையிடப்பட்டதுடன், படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சமூக கருத்துகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

நிகழ்வில் பேசிய நடிகர் மதன், “டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது. சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை முழுமையாக கவரும்” என்றார்.

நடிகர் லல்லு, இயக்குநர் ஹரிஷின் பல ஆண்டுகால உழைப்பின் பலனாக ‘கான் சிட்டி’ உருவாகியிருப்பதாகக் குறிப்பிட்டு, “இது குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய சிறந்த திரைப்படம்” என்றார்.

கலை இயக்குநர் ராஜ்கமல், படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவில் செட் அமைப்புகள் செய்யப்பட்டதாகவும், தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பு படத்தின் தரத்தை உயர்த்தியதாகவும் தெரிவித்தார்.

உடை வடிவமைப்பாளர் நவா, பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தனித்துவமான தோற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடன இயக்குநர் சந்தோஷ், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான காட்சியமைப்புகள் மற்றும் நடன வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எடிட்டர் அருள் மோசஸ், இது தனது முதல் திரையரங்கு வெளியீட்டு படம் என்பதால் மிகவும் சிறப்பான அனுபவமாக இருப்பதாக கூறினார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், “கான் சிட்டி என்பது எங்கள் அனைவரின் உழைப்பின் வெளிப்பாடு. அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன், “கதை முதன்முதலில் கேட்ட தருணத்திலிருந்தே அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோரின் நடிப்பு ரசிகர்களை கவரும்” என்று தெரிவித்தார்.

நடிகர் VTV கணேஷ், “கான் சிட்டி உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களையும் இணைத்து இயக்குநர் ஹரிஷ் சிறப்பாக கையாள்ந்துள்ளார்” என்று பாராட்டினார்.

அருள்தாஸ், இமான் அண்ணாச்சி, சதானந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனது உரையில், “இயக்குநர் ஹரிஷ் கூறிய கனவு திரையில் எந்த சமரசமும் இல்லாமல் உயிர் பெற்றுள்ளது. அர்ஜூன் தாஸ் இந்தப் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான அடுத்த கட்டத்தை அடைவார்” என்றார்.

நடிகை வடிவுக்கரசி, “கதை கேட்டவுடன் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சிரிப்பும், சமூக விழிப்புணர்வும் இணைந்த ஒரு சிறந்த படைப்பாக இது உருவாகியுள்ளது” என்றார்.

அன்னா பென், “இது எனது இரண்டாவது தமிழ் படம். நான் இதுவரை நடித்திராத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை அளிக்கும்” என்று தெரிவித்தார்.

நடிகர் அர்ஜூன் தாஸ், “இது குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய திரைப்படம். உணர்ச்சிகள், நகைச்சுவை மற்றும் அழகான கதைக்களம் கொண்ட இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், “இந்தப் படம் பலருடைய கனவுகள், நம்பிக்கைகள் மற்றும் உழைப்பின் விளைவு. அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென், வடிவுக்கரசி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்” என்று கூறினார்.

கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கான் சிட்டி’, அதனைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Anna BenArjun DasCon CityCon City Promises a Beautiful Story That Touches Hearts with HumorvadivukkarasiVtv GaneshYogi Babu