ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் குஷ்புவின் மகள்!

தமிழ் சினிமாவில் விளையாட்டு திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியாக, வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் இனிதே துவங்கியது. BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் கதாநாயகனாகவும், நடிகர்-இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா சுந்தர் கதாநாயகியாகவும் அறிமுகமாகும் இந்த படம், தமிழ் திரையுலகில் புதிய முகங்களின் வருகையை குறிக்கிறது.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், விளையாட்டு, மனித உணர்வுகள் மற்றும் சமூக அடையாளங்களை இணைக்கும் தனித்துவமான கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்ற பெருமையை “அட்டாக்கர்” பெற்றுள்ளது. விளையாட்டின் துடிப்பையும், அதன் பின்னணியில் இருக்கும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக வாழ்வியலையும் இணைத்து இந்த திரைப்படம் உருவாகிறது.

படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ், எல்.எம். மனோஜ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறை பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘அட்டாக்கர்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் பேசுகையில், “தினேஷ்ராஜ் திட்டமிட்ட தயாரிப்பிலும், தரமான படைப்புகளை உருவாக்குவதிலும் தனித்துவம் கொண்டவர். அவர் தயாரிக்கும் ஒவ்வொரு படைப்பும் தரத்திலும், உருவாக்கத்திலும் தனி அடையாளம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ திரைப்படமும் அந்த வரிசையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தனது உரையில், “எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ மிகவும் சிறப்பான திட்டம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்தப் படத்தில் பல புதுமுக நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “படத்தின் நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விளையாட்டின் உற்சாகத்தையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான திரைப்படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது” என்றார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள “அட்டாக்கர்” படத்தின் புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக “அட்டாக்கர்” உருவெடுத்துள்ளது.

படக்குழு விவரங்கள்:

நடிகர்கள்: பவிஷ், அவந்திகா சுந்தர்
தயாரிப்பு நிறுவனம்: ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட்
தயாரிப்பாளர்: தினேஷ்ராஜ்
கதை, திரைக்கதை, இயக்கம்: தாமோ நாகபூஷணம்
ஒளிப்பதிவு: சாய் முனிஷ்
படத்தொகுப்பு: அருள் மோசஸ்
ஆடை வடிவமைப்பு: நௌஷாத்
உதவி ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா ஜெஸ்ஸி
கலை இயக்கம்: ராமு தங்கராஜ்
விளம்பர வடிவமைப்பு: தில்லிப் டாக்ஸி
மக்கள் தொடர்பு: குணா
மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ்: என். எஸ். ஜெகதீசன்
தயாரிப்பு மேலாளர்: பரத்

ஜினிமா குழு:
• அகான்ஷா முரளி
• ஸ்வித்ரா தேவி

Avantika SundarPavish