சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய படம் அறிவிப்பு

‘2018’, ‘ரேக்காசித்திரம்’, ‘மாளிகப்புரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தனது அடுத்த தமிழ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 12’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனியும் சரத்குமாரும் இணையும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தனித்துவமான திரைக்கதை மற்றும் வித்தியாசமான காட்சியமைப்புகளுக்கு பெயர் பெற்ற அவர், இந்தப் படத்தில் சரத்குமாரை இதுவரை காணாத புதிய தோற்றத்திலும் வலுவான கதாபாத்திரத்திலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி கூறுகையில், “சரத்குமார் சாரின் பிறந்தநாளில் எங்களது அடுத்த தமிழ் படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் அவரது நடிப்பு எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. வலுவான கதையும் அர்ப்பணிப்புள்ள படக்குழுவும் இணையும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. நவம்பர் 2026-க்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் & கதை: கமல் பிரகாஷ்
தயாரிப்பு: காவ்யா ஃபிலிம் கம்பனி – வேணு குன்னப்பள்ளி
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு: கலைவாணன் ஆர்
கலை இயக்கம்: எஸ்.எஸ். மூர்த்தி
கூடுதல் திரைக்கதை & வசனம்: தமிழ் பிரபா
ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
லைன் புரொடியூசர்: கோபகுமார் ஜி.கே.
நிறுவன தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஷிபு ஜி. சுசீலன்

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

New Sarathkumar Film Announced on His BirthdaySarathkumar