கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார்.
மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 மணி நேரம் கொண்ட படமாகும். இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் டிரெய்லரை, பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக, தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார். கடைசியாக, அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படப்பணியிலும் சூர்யா இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.