“நான் பிறந்தது சென்னையில் தான்”- பெத்தி பட விழாவில் நடிகர் ராம்சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு, உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் ஊக்கமூட்டும் தருணங்கள் கலந்த இந்தப் படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘பெத்தி’, வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நாடு முழுவதும் நடைபெற்று வரும் புரமோஷன் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு

“சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் என் பயணத்தில் முக்கியமானவை. அதேபோல் ‘பெத்தி’யும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். இயக்குநர் புச்சி பாபு எழுதியிருக்கும் திரைக்கதை மிகச் சிறப்பானது. இசை, காட்சியமைப்பு மற்றும் நடிப்பு ஆகியவை ஒன்றிணைந்து இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளன. ராம் சரண் இந்தப் படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். கதாபாத்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உடல் மொழி, தோற்றம் மற்றும் மனநிலையை மாற்றிக்கொண்டு அவர் உழைத்த விதம் பாராட்டத்தக்கது. இது அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாக இருக்கும். மேலும், சிவராஜ்குமார் மற்றும் திவ்யேந்து ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசை இந்தப் படத்தின் மற்றொரு தூண். திரையரங்கில் முழுமையாக அனுபவிக்க வேண்டிய திரைப்படம் இது.”

நடிகர் திவ்யேந்து சர்மா

“தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பை ‘பெத்தி’ எனக்கு வழங்கியுள்ளது. ஒரு நடிகராக என் எல்லைகளை தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்ள இந்தப் படம் உதவியது. இயக்குநர் புச்சி பாபு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து கதாபாத்திரத்தை உருவாக்க அனுமதித்தார். ராம் சரண் சார் முதல் நாளிலிருந்தே அன்பாக நடந்து கொண்டதால் இந்தப் பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மான், சிவராஜ்குமார் மற்றும் ரத்னவேலு போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியது எனக்கு பெருமை. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

இயக்குநர் புச்சி பாபு சனா

“சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவை நேசிக்கும் மக்களும், கலைஞர்களை மதிக்கும் பண்பும் இந்த நகரத்தின் பெருமை. ‘பெத்தி’ மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு ரசிகர்களை ஆழமாகக் கவரும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் செய்த உழைப்பு அளவிட முடியாதது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, சிவராஜ்குமார் சார் வழங்கிய கம்பீரமான நடிப்பு ஆகியவை படத்தை இன்னும் உயர்த்தியுள்ளன. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.”

நடிகர் சிவராஜ்குமார்

“புச்சி பாபு இந்தக் கதையை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ராம் சரணுடன் இணைந்து நடிப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. சிகிச்சை காரணமாக சில சவால்கள் இருந்தபோதிலும், படக்குழுவினர் எனக்காக காத்திருந்தது என்னை நெகிழச் செய்தது. ராம் சரண் இந்தக் கதாபாத்திரத்திற்காக எடுத்த உழைப்பு அசாதாரணமானது. அவரது நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். ஏ.ஆர். ரஹ்மான் இசையும், ரத்னவேலுவின் காட்சியமைப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.”

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்

“ராம் சரண் தனது தனித்துவமான பாதையை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெரிய மரத்தின் நிழலில் வளர்ந்தவர் மட்டுமல்ல, இன்று தனக்கென ஒரு ஆலமரமாக உயர்ந்திருக்கிறார். இந்தக் கதையில் இருந்த ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது. இப்படத்தில் பணியாற்றியது எனக்கு முதல் படம் செய்வது போன்ற உற்சாகத்தை கொடுத்தது. பின்னணி இசைப் பணிகளை இன்று காலைதான் முடித்தோம். இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கடைசி வரை இருந்தது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.”

நடிகர் ராம் சரண்

“சென்னை எனக்கு எப்போதும் மிகவும் நெருக்கமான நகரம். நான் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் இங்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு வந்த உணர்வு கிடைக்கிறது. ‘பெத்தி’ திரைப்படத்திற்காக நாங்கள் சுமார் இரண்டரை ஆண்டுகள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. இந்தப் படத்தின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. ஏ.ஆர். ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் ஆற்றல் நிரம்பியதாக இருக்கும். ரத்னவேலு சார் ஒரு உண்மையான ஜாம்பவான்.

இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய, ஊக்கமளிக்கும் மற்றும் மனதைத் தொடும் திரைப்படமாக இது இருக்கும். ஜூன் 4ஆம் தேதி ரசிகர்கள் இந்த அனுபவத்தை திரையரங்குகளில் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.” ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

AR RahmanDivyendu SharmaJagapathi BabuJanhvi KapoorMega Powerstar Ram CharanPeddiShiva Rajkumar