தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது தென்காசியின் இயற்கைச் சூழலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். மொட்டை, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டார்க் ஹியூமர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்ட செட்கள் இல்லாமல், கதையின் இயல்புத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் மலை, காடு உள்ளிட்ட ரியல் லொகேஷன்களில் நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களையும் படத்தில் நடிக்க வைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ராஜு ஜெயமோகன் கூறுகையில், “படத்தில் இயற்கையை முக்கியமான பகுதியாகக் கொண்டுவர விரும்பினோம். அதனால் செட்களில் படப்பிடிப்பு நடத்தாமல், ரியல் லொகேஷன்களில் படமாக்கி வருகிறோம். மழை, காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்தும் கதையின் ஒரு பகுதியாக இருக்கும். தற்போது தென்காசியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இப்படம் டார்க் ஹியூமர் திரைப்படமாக உருவாகி வருகிறது” என்றார்.

இப்படத்தில் துஷாரா விஜயன் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜு ஜெயமோகன், ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரமும், ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் சார்பில் ஹெச். வினோத்தும் இணைந்து தயாரிக்கும் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
