கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் கிரைம் திரில்லர் “ரேவன்”

Web Ads

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சேதுராஜன் ராஜகோபால் மற்றும் ஆர்.வி. சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் மூலம் வே. வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆபிஸ்’ இணையத் தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். மேலும், ‘பீட்ஷா 3’ திரைப்படத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது:

‘ரேவன்’ ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்.

Web Ad 2

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவமும் இந்தத் திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தை அப்படியே படமாக்காமல், அதன் பின்னணியில் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையை உருவாக்கியுள்ளோம்.

இப்படத்தில் காகத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகக் கருதும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் படத்தின் கதைக்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காகத்தைத் தத்ரூபமாக உருவாக்கிப் படத்தில் பயன்படுத்துகிறோம். இது திரையில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைக் கடந்து, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் முக்கியமான சமூகப் பிரச்னை ஒன்றையும் ‘ரேவன்’ அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.

சென்னை, கோவை, ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ரேவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து, இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.