‘தக் லைஃப்’ பட ரிலீஸ் விவகாரம்: இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன?

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகுமா? என்பதை இன்று கோர்ட் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் விநியோகஸ்தர்களும் ஏற்கனவே ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டனர். அவர் மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ எனவும் நரசிம்மலு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில்,
‘கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்’ என முறையிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதை சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
