தமிழ் சினிமாவில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி ரீஎன்ரி
தமிழ்த் திரையுலகில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடலை பாடியதன் மூலமாக அறிமுகமானவர் சின்மயி. பின்னர், 2018-ம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால், அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் பேசுவதற்கும், பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக சின்மயி புகார் கூறியிருந்தார். இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை..’ பாடலைப் பாடும் வாய்ப்பு சின்மயிக்கு கிடைத்தது. ஒரிஜினல் வெர்ஷனை பாடகி தீ பாடியிருந்தார்.
ஆனால், தீ பாடியதை விட சின்மயி பாடியது நன்றாக இருந்ததாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தது. சின்மயின் குரல் ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. இச்சூழலில், ‘சின்மயிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பேன்’ என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியிருந்தார். ‘சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’ என அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இமான், சின்மயியை தனது படத்தில் பாட வைத்துள்ளார்.
கே.எஸ். அதியமான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் பாட சின்மயிக்கு இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்து தனது வலைதளத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,
‘என்றும் ஆன்மாவைத் தொடும் சின்மயியின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசைப் பாடல்’ என பதிவிட்டுள்ளார். இப்பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சின்மயி தமிழ் சினிமாவிற்குள் ரீஎன்ரி கொடுத்துள்ளார்.