இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு
கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது:
‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, சீக்கிரமே டைரக்டர் ஆகிடு எனக் கூறினார்.
அவர் கூறியதைப்போல் நான் இன்றைக்கு இயக்குநராக வளர்ந்து நிற்கிறேன். எனது படங்களைப் பார்த்து நான் காப்பி அடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆமாம், நான் காப்பி அடிக்கிறேன். எனது நிஜ வாழ்க்கையில் இருந்து, அதன் தாக்கத்தின் மூலம்தான் படம் எடுக்கிறேன்.
பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை எனது சேன்சிலர் ஜே.பி. ஆர் சாரைப் பார்த்து தான் உருவாக்கினேன். இந்த நாளில் நான் ஒன்று சொல்கிறேன்,
கல்லூரி வாழ்க்கையில் இருக்கும் உங்களை தொலைத்து விடாதீர்கள். இன்றைக்கு நான் திரைத்துறையில் இயக்குநராக இருப்பது என்பது நெருப்பு மேல் இருப்பதற்குச் சமம். ஆனால், காலேஜ் படிக்கும்போது இருந்த அந்த அருண்குமார் (அட்லீ) நெருப்பாக தான் இருந்தான். இப்போது நான் 5 மணி நேரம் தூங்குகிறேன். ஆனால் காலேஜ் படிக்கும்போது 2 மணி நேரம் தான் தூங்குவேன்.
விஜய் அண்ணா ஸ்டைலில் ஒரு குட்டிக் கதை சொல்லி முடிக்கிறேன். ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தது. அங்கு வந்தவர்கள் வாசலில் இருந்த கல்லைக் கடந்து உள்ளே இருந்த சிலையை வணங்கி விட்டுச் சென்றார்கள்.
ஒருநாள் வாசலில் இருந்த கல், சிலையை பார்த்து, நீயும் கல் தான், நானும் கல் தான். என்னைக் கடந்து செல்கிறார்கள், ஆனால், உன்னை மட்டும் வழிபடுகிறார்களே என்று கேட்டது. அதற்கு சிலை சொன்னது,
உன்னை இரண்டு பக்கம் மட்டும் தட்டி விட்டு விட்டுவிட்டார்கள். என்னை ஒரு ஆயிரம் பேர் வெச்சு செய்து, சிலையாக்கி உள்ளார்கள். அப்படியானால், எனக்கு அதற்கான மரியாதை கிடைக்கத்தான் செய்யும் என்று கூறியதாம்’ எனப் பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தான் அடுத்து இயக்கும் படத்தின் மூலம் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருவதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.