தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..
பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு படக்குழு சம்மதிக்கவில்லை என்பதால் விலகிவிட்டார்.
‘கல்கி 2989 ஏடி’ படத்தின் மையமே தீபிகா படுகோன் கதாபாத்திரம் தான். இதனால் அவருக்கு பதில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இதுவரை இதனை உறுதிப்படுத்தவில்லை. ‘கல்கி 2-ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் இதனை உறுதிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.
பிரியங்கா சோப்ரா தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

