‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்…
நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது.
அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, 24 காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டு, படத்தின் புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கிய பின்னர், தற்போது வசூல் ரீதியாகவும் ‘எம்புரான்’ சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில், ‘எம்புரான்’ படத்தை தயாரித்த தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், இன்று நடிகர் மற்றும் இயக்குநர் பிருத்விராஜிக்கு வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதாவது “நடிகர் பிருத்விராஜின் சம்பளம் குறித்து விளக்கம் அளிக்க வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர் முன்பு நடித்த படங்களுக்கான ஊதியம் குறித்து விளக்கம் பெறப்பட்டது.
அதேபோல், எம்புரான் படத்தை இயக்கியதோடு இணை தயாரிப்பாளராக ரூபாய்.40 கோடி பணம் பெற்றுள்ளதாகவும் இதற்கான கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும் என தற்போது வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.