“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

Web Ads

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“பெத்தி” படத்தின் கதையை முதன்முதலாக கேட்ட தருணமே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற அனுபவத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கதையின் கனமான உணர்வுகளை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த கவனத்துடன் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முதலில் சிறிய மாதிரிகள் உருவாக்கப்பட்டு பின்னர் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பிரம்மாண்ட செட்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், 60-க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 மற்றும் 80களின் காலப்பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்காக விஜயநகரம் பகுதி முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தும் இயல்பாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. படம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட செட்கள் எதுவும் செயற்கையாக தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அதற்காக மிகுந்த நுணுக்கத்துடன் வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் கூறியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையில் பிரம்மாண்ட அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக தரைக்கடியில் அமைக்கப்பட்ட அரங்கில் “பெத்தி” கதாபாத்திரத்தில் ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் காட்சிகளும் கிராமத்து இயல்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” போன்ற பிரம்மாண்ட தோற்றம் அல்லாமல், வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் கிராம மக்களின் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் உள்ளிட்டவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்திலுள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட் கூட கிராமத்து இளைஞன் தானாகவே உருவாக்கியதுபோல இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் பிரதிபலிக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாம்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலுவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும், கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும் என்றும் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் அவர் மிகவும் ரசித்து பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் உள்ளிட்ட அனைத்தையும் ராம்சரண் பெரிதும் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக “பெத்தி” குறித்து அவினாஷ் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரணின் நடிப்பு “ரங்கஸ்தலம்” படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.