விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு
உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்..
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், அவரது மகன் திரைத்துறைக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ‘மாநகரம்’ பட ஹீரோ சந்தீப் கிஷன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், ‘விஜய்யின் மகன் படம்’ என்று கேள்வியை ஆரம்பித்தார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த சந்தீப், ‘விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். அவருக்கு ஜேசன் சஞ்சய் என ஒரு பெயர் இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடித்த சூப்பர் படமாக வரும்’ என்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் மகன் என்று சொன்னால் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு மறுதரப்பு ரசிகர்களோ, ‘அப்படி ஏன் ஜேசனை ஒரு வட்டத்துக்குள் சுருக்க வேண்டும். அப்பாவின் துணை இல்லாமல் வென்றால்தான் அவருக்கு மதிப்பு’ என்று பதிலளித்து வருகிறார்கள். ஆம், அதுதானே தலை நிமிர்ந்த சாதனை.!