டிசி திரைப்பட விமர்சனம்

சூழ்நிலையின் காரணமாக குற்றவாளியாக மாறி சிறைக்குச் செல்லும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), சிறைவாசத்திற்குப் பிறகு தொடர்ந்து குற்றச் செயல்களில் சிக்கி காவல்துறையால் துரத்தப்படுகிறார். அந்த தப்பிப் பிழைக்கும் பயணத்தில் சஞ்சனா ஏ.கே.வை சந்திக்கும் அவர், அவரது நட்பின் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை உணரத் தொடங்கும் தருணத்திலேயே சோகத்தை எதிர்கொள்கிறார்.
அதன்பின், வாழ்க்கையால் சிதைந்த நிலையில் இருக்கும் சந்திரா (வாமிகா கபி)வை சந்திக்கும் தேவதாஸ், அவரது துயரமான வாழ்க்கையிலிருந்து மீட்கிறார். ஆனால் தன்னை சீரழித்த மருத்துவரை சந்திரா கொலை செய்ததால், இருவரும் காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டைக்குள் சிக்குகிறார்கள். அவர்களின் தப்பிப்பயணம், காவல்துறைக்கும் குற்றக் கும்பல்களுக்கும் இடையிலான மோதலாக மாறுவது தான் ‘டிசி’ படத்தின் மையக்கதை.
“குற்றவாளிகளை தண்டிக்கும் காவல்துறையே தவறு செய்தால், அவர்களை எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் கதையை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனது வழக்கமான ரத்தமும் சதையுமாக கூடிய காட்சிமொழியில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
இயக்குநராக வெற்றிகரமாக அறியப்பட்ட லோகேஷ் கனகராஜ், நாயகனாக முதல் முறையாக நடித்துள்ள தேவதாஸ் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது திரைநிலை ரசிகர்களை கவர்கிறது.
நாயகியாக நடித்துள்ள வாமிகா கபி, வார்த்தைகளை விட உடல்மொழியின் மூலம் தனது கதாபாத்திரத்தின் வேதனையை ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சஞ்சனா ஏ.கே. குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும், அவரது கதாபாத்திரத்தின் முடிவு மனதை நெகிழச் செய்கிறது. தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் த்யால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி., தனித்துவமான வண்ணத் தேர்வு, வேகமான கேமரா நகர்வு மற்றும் வித்தியாசமான ஃபிரேமிங் மூலம் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை. ஒவ்வொரு அதிரடி காட்சிக்கும் அவர் வழங்கியுள்ள இசை, வன்முறையின் தாக்கத்தை ரசிக்கும்படியான திரையனுபவமாக மாற்றுகிறது. தொடக்கம் முதல் இறுதி வரை பின்னணி இசை படத்தின் வேகத்தையும் உணர்வையும் தக்க வைத்திருக்கிறது.
ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு, வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும் கதையின் ஓட்டம் சலிப்பில்லாமல் நகர உதவுகிறது.
அருண் மாதேஸ்வரனின் வழக்கமான வன்முறை பாணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. இருப்பினும், தேவதாஸ் – சந்திரா காதல் காட்சிகள் படத்தின் உணர்ச்சி பக்கத்தை வலுப்படுத்துகின்றன. ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு நடுவிலும் காதலை உணர வைக்கும் தருணங்களை உருவாக்கியிருப்பது படத்தின் சிறப்பாக அமைகிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக்கு எதிரான வன்முறையையும் தனது அரசியல் பார்வையையும் இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘டிசி’ காதல், பழிவாங்குதல் மற்றும் வன்முறை ஆகிய மூன்றையும் கலந்த, அருண் மாதேஸ்வரனின் பாணியை முழுமையாக வெளிப்படுத்தும் அதிரடி திரைப்படமாக திகழ்கிறது.

டிசி திரைப்பட விமர்சனம்
காதலும்... கொந்தளிக்கும் வன்முறையும் கலந்த அதிரடி அனுபவம்!
- Rating